திருமாவளவனுக்குத் தேர்தல் ஆணையம் வழங்கிய பானை சின்னம் மக்கள் மத்தியில் சமூக வலைதளங்கள் மூலமாகப் பரவிவருகிறது என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச, திருமா தனது செல்போனிலிருந்து எங்கள் சின்னம், பானை சின்னம் என்ற பிரச்சாரப் பாடலை மைக்கின் மூலம் ஒலிக்கவிட்டார் .
இறுதியாகப் பேசிய திருமாவளவன், “தேர்தலில் போட்டியிட சின்னம் வாங்கவே 20 நாட்கள் தாமதமானது. வைரம், பலாப்பழம், டேபிள் சேர் சின்னத்தில் ஏதாவது ஒன்றைக் கேட்டோம். இருப்பினும் நமக்கு ஏழைகளின் சின்னமான பானை கிடைத்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து, இந்தத் தேர்தல் நமக்கு மிக முக்கியமான தேர்தல், மத்தியில் மோடி ஆட்சியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமியை ஆட்சியையும் விரட்ட வேண்டும். பிரதமராக ராகுல் காந்தியை அமரவைக்க வேண்டும், தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். நமது கூட்டணி, கொள்கை ரீதியான கூட்டணி. அவர்கள் கூட்டணி, விலை கொடுத்து வாங்கிய கூட்டணி, வணிக ரீதியான கூட்டணி என்று விமர்சித்தவர், “திமுகவை அழிக்க தொகுதிக்கு 40 கோடி செலவு செய்கிறார்கள். திமுகவை அழிக்க முடியாது, அழிக்க நினைப்பவர்களை மக்கள் விரட்டி அடிப்பார்கள்” என்று அழுத்தமாகக் கூறினார்.
குறைந்த நாட்கள்தான் இருக்கிறது, ஓய்வு இல்லாமல் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியவர், நமது கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒவ்வொரு பறக்கும் படையை உருவாக்க வேண்டும், எதிர்க்கட்சிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுக்க வேண்டும். நாம் வெற்றி பெறுவோம், நாற்பதும் நமதே என்று பேசி முடித்தார் திருமாவளவன்.
Discussion about this post