கூட்டணிக் கட்சியான திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என்று மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் ஈரோடு தொகுதியில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் இல்லாத நிலையில், புதிய சின்னத்தில் போட்டியிட வேண்டாம் எனவும் இத்தேர்தலில் வெற்றியே முக்கியம் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதிமுகவிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதாகச் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து எந்தச் சின்னத்தில் போட்டியிடலாம் என்று மதிமுக தரப்பில் கலந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.
தேர்தல் ஆணையம் மதிமுகவுக்குப் புதிய சின்னம் ஒதுக்காத நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதாலும், காங்கேயம், தாராபுரம், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, மேற்கு, குமாரபாளையம் உள்ளிட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய தொகுதியாக ஈரோடு இருப்பதாலும், அனைத்துப் பகுதிக்கும் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமானது என மதிமுக யோசித்துள்ளது. இதனால் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிட முடிவெடுத்துவிட்டதாக நேற்று மாலையே செய்திகள் வெளியாகின.
அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர் கணேசமூர்த்தியே இந்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஈரோடு தொகுதிக்கான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் மொடக்குறிச்சியில் நேற்று (மார்ச் 24) நடைபெற்றது. அப்போது பேசிய கணேசமூர்த்தி, திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே தான் போட்டியிடுவதாகத் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 20 இடங்களில் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இதுதவிர இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விழுப்புரத்தில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் நாமக்கல் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தற்போது மதிமுகவும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதால் உதயசூரியன் சின்னம் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post