நேற்று (மார்ச் 24) இரவு 8 மணியளவில் மும்பை அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையேயான ஐபிஎல் போட்டி மும்பையில் தொடங்கியது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
டெல்லி அணி சார்பில் முதலில் களமிறங்கிய ப்ரித்வி ஷா ஆறு பந்துகளுக்கு ஏழு ரன்களை எடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார். அதைத் தொடர்ந்து ஷ்ரெயாஸ் ஐயர் 10 பந்துகளுக்கு 16 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். ஷிகர் தவான் சிறப்பாக ஆடி 36 பந்துகளுக்கு 47 ரன்களை குவித்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் தனது அதிரடி ஆட்டத்தால் 78 ரன்களைக் குவித்தார். தொடர்ந்து சிக்ஸர்களை குவித்த ரிஷப் பந்த் 27 பந்துகளில் 78 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆடினார். மொத்தம் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களைக் குவித்தது டெல்லி அணி.
பின்னர் மும்பை அணி சார்பாக குவிண்டன் டி காக்கும், ரோகித் சர்மாவும் களமிறங்கி 33 ரன்களைக் குவித்தனர். யுவராஜ் சிங்கும், பொல்லார்டும் கூட்டணி அமைத்து 50 ரன்களை குவித்தனர். பின்னர் களமிறங்கிய க்ருனால் 13 பந்துகளுக்கு 21 ரன்களைக் குவித்தார். பின்னர் அவரும் விக்கெட்டை இழக்க யுவராஜ் சிங் மட்டுமே மும்பையின் ஒரே நம்பிக்கையாக இருந்தார்.
ரன் ரேட் 20க்கு மேல் போகவும் யுவராஜ் சிங் அரை சதம் அடித்தார். 19ஆவது ஓவருக்கு பிறகு மும்பை அணி தனது வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது. 176 ரன்களுக்கு மும்பை அணியில் அனைவரும் விக்கெட் இழந்தனர். 37 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ரிஷப் பந்தின் அதிரடி ஆட்டத்துக்குப் பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post