சிறையில் நிர்மலா தேவியை மூன்று முறை கொலை செய்ய முயற்சி நடந்ததாக வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். 11 மாதங்கள் சிறையிலிருந்த அவருக்கு கடந்த 12ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இருப்பினும் இரண்டு வாரங்கள் கழித்தே ஜாமீனில் வெளியே வந்தார் நிர்மலா தேவி. இவர் வெளியே வந்தால், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஜாமீனில் விடுதலையான நிர்மலா தேவியை சந்தித்ததாக கூறினார். “சிறையில் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் அவரை சந்தித்து சுதந்திரமாகப் பேச முடியவில்லை. மற்ற கைதிகளை வைத்து நிர்மலா தேவியை அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். கைதிகள் மூலம் அவர் மூச்சை பிடித்து மூன்று முறை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளது. ஆளுநரை மிரட்டுவதற்காக அமைச்சர் ஒருவரே நிர்மலா தேவி ஆடியோவை வெளியிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மதுரை ஆவின் நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேரும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகக் கூறிய அவர், இது தொடர்பாக 127 காட்சிப் பதிவுகள் தம்மிடம் இருப்பதாகத் தெரிவித்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தான் வழக்கு தொடர இருப்பதாகவும் கூறினார்.
Discussion about this post