தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி பொது விடுமுறை என அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரிக்க செய்வதற்காக தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக அரசு நேற்று (மார்ச் 27) வெளியிட்டுள்ள அரசாணையில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தியும், மக்கள் பணி சுமையின்றியும், இடையூறு இன்றியும் வாக்களிக்கும் வகையிலும் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்குப்பதிவு அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தங்கள் வாக்குகளை தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post