தமிழ் சினிமா வட்டாரத்தில் கடந்த ஒரு வாரமாக அக்னிதேவி பட வெளியீட்டுக்கு எதிராக அப்படத்தில் நடித்த பாபி சிம்ஹா மேற்கொண்ட வழக்கும் அது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு கட்டுபடாததால் நாடோடிகள் – 2 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த விஷால் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.
இப்படத்தின் பிரச்சினை குறித்து படத்தின் இணை தயாரிப்பாளரான ஸ்டாலின், ”இப்படத்தின் கதையில் பாபி சிம்ஹா தலையீடு அதிகமாக இருந்தது. அவர் ஐந்து நாள்கள்தான் ஷூட்டிங் வந்ததாகச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் 13 நாள்கள் நடித்ததற்கான ஆதாரம் உள்ளது. அவர் கோபப்பட்டுப் போனவுடன், அவரிடம் இது குறித்துப் பேச பலமுறை அழைத்தோம். அவர் வரவில்லை. டப்பிங் பேச அழைத்தபோதும் ரெஸ்பான்ஸ் இல்லை. அதனால், அவர் நடித்த காட்சிகளுக்கு மற்றொருவரை டப்பிங் பேசவைக்க முடிவு செய்தோம்.
அதேபோல, இவர் வராததால் இரண்டு ஆக்ஷன் காட்சிகளுக்கு வழக்கமாக இவருக்கு டூப் போடும் நபரை வைத்து எடுத்து முடித்தோம். இது போன்ற முடிவுகள் எடுக்கும் உரிமை படத்தின் இயக்குநருக்கு உண்டு. படத்தின் இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது ஜாமீனில் வெளிவரமுடியாதபடி வழக்கைப் பதிவு செய்துள்ளார் பாபி சிம்ஹா. படம் முடிந்து திரைக்கு வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நடந்த பேச்சுவார்த்தையில், பாபி சிம்ஹா நடந்துகொண்ட விதம் அநியாயமானது.
முறைப்படி போட்ட ஒப்பந்தத்தைக் கிழித்துவிட்டு, அவர் சொல்லும்படி ஒப்பந்தம் போடவேண்டும், படத்தின் எடிட்டிங்கை தான் தான் இறுதி செய்வேன், இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜான் மன்னிப்பு கேட்டுக் கடிதம் கொடுக்கவேண்டும், எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாகப் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றெல்லாம் கன்டிசன் போட்டார்.
இந்தப் படத்துக்கு நீதிமன்றம் தடை செய்ததுள்ளது என்று ஊடகங்களுக்குப் பொய்யான தகவலைப் பரப்பினார். உண்மையாகவே நீதிமன்றம் படத்துக்குத் தடை விதித்திருந்தால், சென்சார் கிடைத்திருக்காது, க்யூபில் ரிலீஸ் செய்யவே விட்டிருக்கமாட்டார்கள்” என்று கூறினார்.
இந்தப் படத்தை விநியோகம் செய்த கோவை வேல்முருகன் கூறுகிறபோது, “படத்துல பிரச்னை இருக்குனு எனக்குத் தெரியாது. பாபி சிம்ஹா அமைதியா இருந்திருந்தாலே மக்கள் எப்போவும்போலப் படம் பார்க்க வந்திருப்பாங்க.
நான் நடிக்கவே இல்லை என்று தொடர்ந்து பாபி சிம்ஹா பேசியதால் படம் பார்க்க தியேட்டருக்கு மக்கள் வரலை. ‘Status Quo’ தவிர எந்த ஒரு நோட்டீஸும் நீதிமன்றம் எங்களுக்கு அனுப்பவில்லை.
நீதிமன்றம் தடை விதித்திருந்தால் படத்தை எப்படி ரிலீஸ் செய்திருக்க முடியும், இது போன்று பாபி சிம்ஹா நடந்து கொள்வது முதல்முறையல்ல. இதேமாதிரி அவர் பலமுறை செய்துள்ளார். ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்துக்கும் இதேதான் நடந்தது.
அந்தப் படம் சரியா ஓடாமல் போனதற்கும் இவர் ஐந்து நாள் நடிக்காததுதான் காரணம். கடைசியா பாதிக்கப்படுவது நடிகர்களை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்கள்தான்” என்றார்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் பாபி சிம்ஹா நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை எனவும், புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யக் கூடாது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு படத்தைக் ஓடவிடாமல் தடுக்க நீதிமன்ற உத்தரவு எனப் பொய் சொன்ன பாபி சிம்ஹா மீது ‘அக்னி தேவி’ தயாரிப்பாளர் வழக்கு போட்டு நஷ்டஈடு கோரவேண்டும். இது போன்றவர்களால் புதிய தயாரிப்பார்கள், இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் பாதிக்கப்படுவது தடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் பேசியதோடு சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் இன்று (மார்ச் 28) காலை பாபி சிம்ஹா மீது புகார் கொடுத்துள்ளனர்.
Discussion about this post