திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இல்லங்களில் சோதனை நடத்தினால் ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, இன்று (ஏப்ரல் 1) அவரது நண்பர் சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அதில் கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று மதியத்துக்குப் பிறகு துரைமுருகன் இல்லத்தில் மீண்டும் சோதனை நடைபெற்றுவருகிறது.
சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில், இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வருமான வரித் துறை என்பது சுதந்திரமான அமைப்பு. தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் சோதனை நடத்துவர். அதன்படிதான் துரைமுருகன் இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் ஒன்றும் சிக்கவில்லை எனவும் இது பழிவாங்கும் நடவடிக்கை எனவும் துரைமுருகன் கூறினார்.
ஆனால் இன்றைக்கு கத்தை கத்தையாக ரூ.10 கோடி வரை பணம் சிக்கியுள்ளதாம். அவ்வளவு பணத்தை எந்திரம் வைத்து எண்ணுகிறார்களாம். இந்த விஷயத்தில் வருமான வரித் துறை திறம்பட செயலாற்றியுள்ளது. இன்னும் திமுக முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் இல்லங்களில் வருமான வரி சோதனை நடத்தினால் கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடி வரை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.
திமுகவினர் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு ப்ளூ ஸ்கை ஆபரேஷன் என்று பெயர் வைத்துள்ளதாகவும் ஜெயக்குமார் கூறினார். திமுகவில் அடுத்து சிக்கப்போவது யார் என்ற கேள்விக்கு, “இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும்” என்றும் பதிலளித்தார்.
வருமான வரி சோதனை தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியபோது கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை அவர்கள் மிரட்டுவதாகச் சொல்கின்றனர். வருமான வரி சோதனை என்பது தப்பு செய்தவர்களுக்கு திகிலூட்டக்கூடிய விஷயம் தான். நான் அப்படித்தான் பார்க்கிறேன். வருமான வரி சோதனை செய்தவர்களும், செய்யப்பட்டவர்களும் உத்தமர்கள் அல்ல” என்று விமர்சித்தார்.
Discussion about this post