ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அத்துடன் கூடுதலாக தோல்வி பயமும் கண்ணை மறைப்பதால் பாமகவையும், என்னையும், எனது குடும்பத்தினரையும் பற்றி அருவருக்கத்தக்க அவதூறுகளை ஸ்டாலின் பரப்பி வருகிறார். தாம் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதியற்ற வகையில் ஸ்டாலின் கூறியுள்ள தகவல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், “வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகளையெல்லாம் ராமதாஸ் அவருடைய துணைவியார் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு நினைத்தால் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றி விட முடியும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அதிமுக அணியில் பாமக இணைந்துள்ளது” என்று கூறியுள்ளார். திமுகவினரின் மொழிநடையில் கூறினால், இது பவானி ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும். வழக்கம் போலவே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று இந்த விஷயத்திலும் ஸ்டாலின் உளறிக் கொட்டியிருக்கிறார்.
மு.க.ஸ்டாலின் முதலில் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உன்னதமான அமைப்பு ஆகும். அது திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துக்களை பதுக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஓர் கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
Discussion about this post