வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா?
ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் ஆய்வு செய்ய நான் அனுமதிப்பதைப் போன்று திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவற்றை பா.ம.கவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய அனுமதிக்க ஸ்டாலின் தயாரா?
வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் முறைப்படி வாங்கப்பட்டவை. அதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மாறாக, பல மாவட்டங்களில் திமுக அறக்கட்டளைக்காக சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் வளைக்கப்பட்டவை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். அவற்றை ஆய்வு செய்ய ஸ்டாலின் அனுமதிப்பாரா?
திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், விருத்தாசலம், சிதம்பரம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள வன்னியர் சொத்துகளும் எனது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் உளறி உள்ளார். வாய்ப்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாயில் வந்ததை எல்லாம் உளறுவது 70 ஆண்டு கட்சியின் தலைவருக்கு அழகல்ல.
ஸ்டாலின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமின்றி இன்னும் ஏராளமான இடங்களிலும் வன்னியர்களுக்கு சொத்துகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆங்காங்கே உள்ள சமுதாயப் பெரியவர்கள் முறையான அமைப்பை வைத்து நிர்வகித்து வருகின்றனர். இத்தகைய உண்மைகளை திமுகவில் உள்ள துரைமுருகன் போன்ற விஷயம் தெரிந்த வன்னிய தலைவர்களிடம் கேட்டு அதன்பிறகு ஸ்டாலின் பேசியிருந்தால் இப்படியெல்லாம் அவமானப்பட வேண்டியிருக்காது.
Discussion about this post