துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன், அரவிந்த் சாமியை கதாநாயகனாகக் கொண்டு நரகாசூரன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் பணிகள் நிறைவுபெற்ற நிலையிலும் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. தற்போது இவர் நாடக மேடை என்ற புதிய படத்தை இயக்கிவருகிறார். ரோன் எத்தன் யோஹன் இதற்கு இசையமைக்கிறார்.
“இரண்டு இளைஞர்களின் பார்வையில் நவீன சமூகத்தைப் பார்க்கும் படமாக இருக்கும். ஒரு விதத்தில், என் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், நான் என்னவெல்லாம் செய்தேன் என்பதைக் கூட இதில் சொல்ல இருக்கிறேன்” என்று படம் குறித்து கார்த்திக் நரேன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
தற்போது இவர் கார்த்திக் ராஜு இயக்கும் கண்ணாடி படத்தில் நடிக்கவுள்ளார். சந்தீப் கிஷன், அன்யா சிங் இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். இவர்களோடு முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நரேனும் மாளவிகா நாயரும் நடிக்கின்றனர். இந்தத் தகவலை சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார். குக்கூ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா நாயர் நடிகையர் திலகம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கதைகளையும், கதாபாத்திரங்களையும் கவனமாக தேர்வு செய்து வரும் மாளவிகா நாயர் தனது கதாபாத்திரம் பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள நரகாசூரன் படத்திலும் சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்நிலையில் கண்ணாடி படம் குறித்து அவர், “ நானும் கார்திக்கும் நல்ல நண்பர்கள். இந்த கதாபாத்திரத்திற்கு அவர் பொருத்தமானவராக இருப்பார் என்று அவரை நடிக்கவைத்தோம். அவர் கதாபாத்திரத்திற்கான உடைகளை நானே வாங்கினேன்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post