போலி வருமான வரி அதிகாரிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று வருமான வரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் போன்று நடித்து, மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்துப் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால், உண்மையாகவே வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறதா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 3) சென்னை வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் ஆர்.இளவரசி செய்திக்குறிப்பொன்றை வெளியிட்டார். போலி அதிகாரிகளிடம் ஏமாற வேண்டாம் என்றும், சோதனை நடத்த வருபவர்கள் குறித்துச் சந்தேகம் எழுந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“துறை ரீதியான அனுமதியை முறையாகப் பெற்ற பின்னரே வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணைகளையும், சோதனைகளையும் மேற்கொள்கின்றனர். சோதனை நடத்த வருபவர்கள் மீது பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களுடைய துறை சார்ந்த அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டு, அவர்கள் வருமான வரித் துறையைச் சார்ந்தவர்கள் தானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
வருமான வரித் துறை வழங்கும் அடையாள அட்டையில், அதனை வழங்கும் அதிகாரியின் கையெழுத்தும் பதவியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
சந்தேகம் ஏற்பட்டால் வருமான வரித் துறை இணை ஆணையர் (புலனாய்வு) எம்.முரளிமோகனை 8985970413 என்ற எண்ணிலும், வருமான வரித் துறை மக்கள் தொடர்பு அதிகாரி டி.என்.குருபிரசாத்தை 9445953544 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். வருமானவரி அதிகாரிகள் போல நடிக்கும் மோசடிப் பேர்வழிகளிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று இளவரசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post