மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு கட்சியினரும் வேகவேகமாக ஈடுபட்டிருக்கின்றனர். பிரச்சாரம் நிறைவடைய குறைவான நாட்களே இருக்க, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய வருவாரா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிகவுக்கு இப்போது பிரச்சார பீரங்கி என்று பார்த்தால் பிரேமலதாவைத் தவிர யாருமில்லை. அவரும் திருச்சி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், வடசென்னை என்று தங்கள் தொகுதிகளைத் தவிர கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரச்சாரத்துக்கு செல்கிறார்.
இந்நிலையில் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என்று பிரேமலதா சொல்லி வந்த நிலையில் எப்போது வருவார் என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்துள்ளது.
போனமாதம் ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு பேட்டியளித்த சுதீஷ், “மருத்துவ சிகிச்சை முடிந்து வந்திருக்கும் விஜயகாந்த், தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். ஆனால் பேசமாட்டார். அவரைப் பார்த்தாலே போதும் என்று தொண்டர்கள் கருதுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் பின் அண்மையில் திருச்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, “விஜயகாந்துக்கு வீட்டிலேயே ஸ்பீச்சிங் தெரபி கொடுக்கப்படுகிறது” என்று சொல்லியிருந்தார்.
விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவாரா மாட்டாரா என்று தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேசினோம்.
“ சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தால் பழையபடி செயல்பட முடியவில்லை என்பதே உண்மை. கூட்டணிப் பேச்சுவார்த்தை, உடல் நலம் விசாரிப்பு என்று அவரை மையமாகவே வைத்து எல்லாம் நடந்தது. ஆனால், விஜயகாந்தால் இப்போது பேசவே முடியவில்லை. அதற்காகத்தான் தினமும் காலை மாலை இருவேளை பேச்சுப் பயிற்சி நடக்கிறது. ஒரு சில வார்த்தைகளாவது அவரைப் பேச வைத்து தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் அவரை ஈடுபடுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன.
நான் விஜயகாந்த் பேசறேன்… முரசுக்கு ஓட்டுப் போடுங்க என்பன போன்ற சிம்பிள் வாக்கியங்களை பேச வைக்க பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதெல்லாம் நடந்தால் சுதீஷ் போட்டியிடும் கள்ளக்குறிச்சியில் மட்டும் விஜயகாந்த் தலைகாட்டுவார். அல்லது கூட்டணிக்காக வாக்குகள் கேட்டு விஜயகாந்த் பேசும் ஒரு வீடியோவை வெளியிடலாம் என்றும் ஒரு திட்டமிருக்கிறது” என்கிறார்கள்.
Discussion about this post