பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்த ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசினின் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு நிர்வாகத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.
கர்நாடகா மாநில ஐஏஎஸ் அதிகாரி முகமது மோசின் (Mohammed Mohsin). இவர் ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார். கடந்த 17ஆம் தேதி ஒடிசா மாநிலம் சம்பல்பூர் வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இவர் சோதனை நடத்தினார். விதிகளை மீறி தேர்தல் பார்வையாளர் முகமது மோசின் செயல்பட்டார் என்றும், தனது பணியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார் என்றும் கூறி அவரை பணியில் இருந்து தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து முகமது மோசின், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந் தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ’’கருப்பு பூனைப்படை பாதுகாப்பில் உள்ளவர்களின் வாகனங்களை சோதனையிடக் கூடாது என்று விதிகள் இல்லை. பிரதமரின் ஹெலிகாப்டரில் பெட்டிகள் இறக்கப்பட்டதாகத் தேர்தல் பார்வையாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மோசின், சோதனை மேற்கொண்டுள்ளார். தேர்தல் நடக்கும் நேரத்தில், இதுபோன்ற தகவல் கிடைத்தால் சோதனை மேற்கொள்ள வேண்டியது, தேர்தல் பார்வையாளரின் கடமைதான். எனவே மோசின் மீது தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைக்குத் தடை விதிக்கிறோம்’’ என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உத்தரவில் தெரிவித் துள்ளது.
Discussion about this post