திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், மொட்டூர், கங்காபுரம் கிராமங்களில், செய்யாறு நதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 783 வாகனங்கள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, 2.15 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால் மற்றும் நீதிபதி வைத்தியநாதன் அமர்வு, மணல் கடத்தலில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை அளித்துள்ள போதும், அதில் எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டது, எவ்வளவு மணல் பறிமுதல் செய்யப்பட்டது என்பன உள்ளிட்ட விவரங்கள் இல்லை என அதிருப்தி தெரிவித்தனர். மாவட்ட, தாலுகா குழுக்கள், ஏசி அறையில் ஆலோசிப்பதால் எந்த பயனும் இல்லை எனவும், களத்திற்கு சென்று கடத்தலை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், மணல் கடத்தலை தடுக்க முடியாத நிலைக்கு அதிகாரிகள் மட்டத்தில் சில கருப்பு ஆடுகள் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது என வேதனை தெரிவித்த நீதிபதிகள், நேர்மையான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வந்தாலும், அவர்கள் மீது கொலை முயற்சி, அரசியல் செல்வாக்குகள் பயன்படுத்தப்படுவதால் அவர்களும் நடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதாகக் குறிப்பிட்டனர்.
மணல் கொள்ளையை தடுக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து நதிக்கரைகளிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் உயரதிகாரிகளை இணைக்கவும் அறிவுறுத்தினர். மேலும், மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், கடமை தவறினால் அவர்களை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Discussion about this post