இலங்கையில் பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்பதால், அங்கு செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 359 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 500-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 11 பேர் உட்பட வெளிநாட்டை சேர்ந்த 36 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கத்தோலிக்க தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்புக் கருதி மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக 10 நாட்களுக்கு முன்பே தகவல்கள் கிடைத்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து இலங்கை மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில் மேலும் இலங்கையில் பயங்கரவாதிகள் மேலும் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என்கிற அச்சம் நிலவுவதால், அங்கு செல்வதை தவிர்க்குமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் வெளிநாட்டினர் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் எச்சரித்துள்ளது. இதேபோல, அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளும் தங்கள் குடிமக்கள் இலங்கை செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
Discussion about this post