காங்கிரஸும், பாஜகவும் 4ஆம் கட்ட தேர்தலில் பல்வேறு தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன.
மக்களவைத் தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப் பதிவுகள் முடிந்துள்ள நிலையில் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இவற்றில் பெரும்பான்மை தொகுதிகள் இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் வருகின்றன. இம்மாநிலங்களில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் பெரும் வாக்கு வங்கி இருப்பதால் 4ஆம் கட்ட தேர்தல் இருகட்சிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது.
இந்த 71 தொகுதிகளில் 45 தொகுதிகள் தற்போது பாஜக வசம்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்தமுறை இத்தொகுதிகளில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொகுதியையும், மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியையும் மட்டுமே வென்றிருந்தது. பிஜு ஜனதா தளம் 6, மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரஸ் 6, உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி 1 தொகுதி என வென்றிருந்தது. ஆனால் அண்மையில் நடந்த 5 மாநில சட்ட மன்றத் தேர்தலில் இந்தி பேசும் மக்கள் அதிகம் வாழக்கூடிய மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.
இதனால் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கக் கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக 4ஆம் கட்ட தேர்தல் உள்ளது. பிகாரில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் கட்சி 2014ஆம் ஆண்டில் பாஜகவுக்கு எதிராக இருந்த நிலையில், தற்போது பாஜக கூட்டணியில் இருப்பது பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயத்தில் ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த மெகா கூட்டணி 2004ஆம் ஆண்டில் அமைந்தபோது அங்கு பாஜகவால் ஒரு தொகுதியை மட்டுமே வெல்ல முடிந்தது. அங்குள்ள 14 தொகுதிகளில் தற்போது 12 தொகுதிகள் பாஜக வசம் உள்ளன. இதனால் இந்த மெகா கூட்டணியை எதிர்த்து ஜார்கண்டில் பாஜக இம்முறை அதிக தொகுதிகளைக் கைப்பற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து காங்கிரஸ் ஆட்சியமைத்து 5 மாதங்கள்தான் ஆகிறது. இருப்பினும் இருகட்சிகளுக்குமான வாக்கு வங்கி கிட்டத்தட்ட சரிசமமாக இருப்பதால் மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசாவில் பத்தாண்டுக்கும் மேலாக பிஜூ ஜனதா தளம் இருந்து வருகிறது. அங்கு சட்ட மன்றத் தேர்தலும் இணைந்து நடக்கிறது. மீண்டும் ஆட்சியமைக்க பிஜூ ஜனதா தளம் கடுமையான பிரச்சார யுக்திகளைக் கையாண்டு வரும் நிலையில், ஒடிசாவில் தனது வெற்றிக்கணக்கை தொடங்கிவிட பாஜகவும் கடும் பிரச்சாரத்தை வெளிப்படுத்தி வருகிறது. அம்மாநில அரசைக் கடுமையாகத் தாக்கி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. இதனால் ஒடிசாவில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ராஜஸ்தானிலும் பாஜக-காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. மத்திய பிகார் தொகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுள் ஒருவரான கிரிராஜ் சிங்கை எதிர்த்து சிபிஐ கட்சியின் சார்பில் ஜேன்யூ மாணவராக இருந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட கண்ணையா குமார் போட்டியிடுகிறார். இத்தொகுதி கடும் போட்டியைக் கொண்ட தொகுதியாக உருவெடுத்துள்ளது.
Discussion about this post