இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரியாகக் கருதப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்தின் தலைவரான ஜஹ்ரன் ஹாஷிம் இந்த குண்டுவெடிப்பிலேயே கொல்லப்பட்டதாக இலங்கை அதிபர் சிறிசேனா நேற்று அறிவித்தார். கொல்லப்பட்ட ஹாஷிம் தமிழ்நாட்டில் பயிற்சிபெற்றவர் என்று இலங்கை ராணுவத்தினரை மேற்கோள் காட்டி தி ஹிந்து ஆங்கில நாளேடு அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 9 தற்கொலைப் படையினர் இடம்பெற்றதாகவும், அவர்களை ஒருங்கிணைத்தது இலங்கையிலுள்ள தேசிய தவ்ஹித் ஜமாத்தின் தலைவன் ஜஹ்ரன் ஹாஷிம் என்றும் இலங்கை புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, “முஸ்லிம்கள்தான் ஆள வேண்டும். மற்றவர்களுக்குக் கீழ் முஸ்லிம்கள் இருக்கக் கூடாது” என்று ஹாஷிம் தமிழில் பேசிய வீடியோக்கள் சமூக தளங்களில் வெளிவந்தன.
இந்நிலையில், “இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஐஎஸ் ஐஎஸ் இயக்கத் தொடர்புடையவர்கள் என்ற கோணத்தில் விசாரித்துவருகிறோம். எங்களுக்கு மேலும் இருக்கும் முக்கிய சந்தேகம் என்னவெனில் இந்த தற்கொலைப் படையினரில் சிலர் இந்தியாவில் கற்பிக்கப்பட்டும், பயிற்சி அளிக்கப்பட்டும் இங்கே அனுப்பப்பட்டிருக்கலாம் என்பதே. அதிலும் குறிப்பாக அவர்களின் தளம் தமிழ்நாடாக இருக்கலாம் என்பதே எங்கள் சந்தேகம்” என்று அடையாளம் தெரிவிக்க விரும்பாத மூத்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறியதாக தி இந்து தகவல் வெளியிட்டிருக்கிறது.
மேலும், கடந்த 2018 செப்டம்பரில் கோவையில் அர்ஜுன் சம்பத்தை கொல்ல முயற்சித்ததாக கைதான சிலர் ஜஹ்ரன் ஹாஷிமின் வீடியோக்களை வைத்திருந்ததாகவும் தெரிகிறது. அப்போதே இதுகுறித்து இலங்கை அரசுக்குத் தகவல் தெரிவித்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகின. இதன் மூலம் ஜஹ்ரன் ஹாஷிமுக்கும் தமிழகத்திலுள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் தகவல் தெரிவித்தது என்று கூறப்பட்டது.
ஆனால், அப்போது கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஆசிக் என்பவர் ஊடகங்களிடம் பேசுகையில், “எங்களை அடித்துத் துன்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் பொய் வழக்கு போட்டனர். வழக்கில் ஒன்றும் இல்லை என்பதால்தான் ஜாமீனில் விடுதலை செய்தது கோர்ட். இல்லையென்றால் விட்டிருக்க மாட்டார்கள்’ என்கிறார்.
இதே நேரம் ஃபேஸ்புக்கில் ஹாஷிமை ஃபாலோ செய்தவர்களைப் பற்றி தீவிரமாக விசாரித்துவருதாகவும் இலங்கைப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பட்டிகோலா மாவட்டத்துக்கு உட்பட்ட கட்டன்குடி பகுதியைச் சேர்ந்த ஜஹ்ரன் ஹாஷிம் சில வருடங்களுக்கு முன்பே தன் சொந்த ஊரை விட்டுச் சென்றுவிட்டதாகவும், அவன் தலைமறைவாக இருந்ததாகவும் இலங்கை போலீஸார் தெரிவித்தனர். மேலும், ஜஹ்ரான் ஹாஷிம் மாற்று மதத்தின் மீது மட்டுமல்ல, இஸ்லாமியர்களின் சில பிரிவுகளையே ஏற்காமல் அவர்கள் மீதும் கடுமையான சொற்களை சொல்லிவந்தார் என்றும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில்தான், ஷாங்ரி லா ஹோட்டலில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஜஹ்ரன் ஹாஷிம் கொல்லப்பட்டதாக அதிபர் சிறிசேனா தெரிவித்தார்.
Discussion about this post