ஹாலிவுட் படம் வெளியாவதை முன்னிட்டு ரசிகர்கள் வீடியோ எடுக்க கண்டிப்பு காட்டிய தியேட்டர் உரிமையாளரை, ஏன் தமிழ்ப் படங்களுக்கு மட்டும் இதைக் காட்டவில்லை என நடிகர் விஷால் ட்விட்டரில் வாதிட்டுள்ளார்.
மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி உருவான படம் அவெஞ்சர்ஸ். முதல் மூன்று பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் கடைசி பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் என்ற படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் வசனத்தில் முக்கிய கதாபாத்திரங்களுக்கு விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா போன்றோரின் குரலில் டப் செய்யப்பட்டு நேற்று (ஏப்ரல் 26) வெளியானது.
ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு முன், தமிழ் ராக்கர்ஸ் அவெஞ்சர்ஸை இணையத்தில் வெளியிட அதன் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். கதையின் முக்கியமான திருப்பங்கள் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவும், பிரத்தியேகமாக அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்காக தியேட்டரை மெருகேற்றியுள்ள சென்னை வெற்றி தியேட்டர்ஸ் ராகேஷ் கெளதமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேமை வீடியோ எடுக்கும் நண்பர்களிடம் நாங்கள் கொஞ்சம் கண்டிப்பாக இருப்போம். தயவுசெய்து உங்கள் தொலைபேசியை சைலன்ட் முறையில் மாற்றி, உள்ளே வைத்து, சமூக ஊடகங்களில் அப்டேட் செய்வதைத் தவிர்த்து, படத்தை ரசியுங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், “வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே வரும் ஆங்கிலப்படத்துக்கு இருக்கும் இத்தகைய அறிவிப்பு வாரவாரம் திரைக்கு வரும் தமிழ் படங்களுக்கும் இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு ராகேஷ் கெளதமன், “நாங்கள் எப்போதும் சினிமாவுக்கு ஆதரவாகவும், பைரசிக்கு எதிராகவும் உள்ளோம். அதற்கு மொழி ஒரு தடையில்லை” என பதிலளித்துள்ளார்.
Discussion about this post