சமந்தா ராம் சரணுடன் இணைந்து நடித்த தெலுங்குப் படமான ரங்கஸ்தலம் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
நடிகை சமந்தா வேம்பு கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், தெலுங்கில் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த மஜிலி திரைப்படமும் வெற்றி பெற்று இந்த வருடம் ஒரு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ராம் சரண் சமந்தா நடித்த ‘ரங்கஸ்தலம்’ திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் சென்னை உள்பட முக்கிய நகரங்களிலும் வெளியாகி நன்கு ஓடியது.
பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, அனசூயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுகுமார் இயக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீரியட் ஆக்ஷன் திரைப்படமான இதைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸிடருந்து தமிழுக்கு டப்பிங் உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
இந்தப் படத்தை தமிழில் ஸ்டுடியோ க்ரீன் கே.இ. ஞானவேல்ராஜா வெளியிடவுள்ளார். ரங்கஸ்தலம் படம் தயாரிப்பிலிருந்தபோதே அதன் ஒவ்வொரு நிலைகளையும் கவனித்து வந்ததாகவும், அந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களைத் தன்னால் உணர முடிந்ததாகக் கூறிய ஞானவேல்ராஜா, வரும் கோடை விடுமுறையைக் குறிவைத்து, ரங்கஸ்தலம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Discussion about this post