தோனி இல்லாத சென்னை அணி பரிதாபகரமாக தோல்வியைச் சந்திப்பது மீண்டும் தொடர்கிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 26) ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். டி காக் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்களில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் ரோஹித் ஷர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 48 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்களை எடுத்தது. ஹர்திக் பாண்டியா 23 ரன்களுடனும், பொல்லார்டு 13 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. முரளி விஜய், வாட்சன் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். ஹைதராபாத் அணியுடனான கடந்த போட்டியில் 96 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்த வாட்ஸன் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
அதைத் தொடர்ந்து கேப்டன் ரெய்னா 2 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கேதர் ஜாதவ் 6 ரன்களிலும், ஷொரே 5 ரன்களிலும் ஆட்டமிழக்க நிலைத்து நின்று ஆடிய முரளி விஜய் 38 ரன்களில் வெளியேறினார். இதனால் சென்னை அணி 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.
பின்னர் வந்த பிராவோவும், சான்ட்னெரும் இணைந்து நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். அதனால் சென்னை அணி 100 ரன்களை தாண்ட முடிந்தது. இருப்பினும் 17.4 ஓவர்களில் சென்னை அணி 109 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 67 ரன்கள் குவித்த ரோஹித் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நடப்பு தொடரில் அனைத்து அணிகளையும் வெற்றிகொண்ட சென்னை அணி மும்பையிடம் இரண்டாவது முறையாகவும் தோல்வியையே சந்தித்துள்ளது.
Discussion about this post