திருப்பூரில் உயர் மின்னழுத்தப் பாதைகள் அமைக்கும் திட்டப்பணிகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்திருந்தால் அதனைத் தொடரவும், 50 சதவீதத்திற்கும் குறைவாக முடிந்திருந்தால் நிறுத்தி வைக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில் புதிய புகழூரிலிருந்து பழைய புகழூர் மற்றும் திருவலம் வரையிலான விளைநிலங்களில் மின் வழிப்பாதைகள் அமைக்க மத்திய மின் வாரியம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனக் கரூரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு முன்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும், ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் திட்டப்பணிகள் 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்திருந்தால் அதை தொடரவும், 50 சதவீதத்திற்கும் குறைவாக முடிந்திருந்தால் நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.
மேலும் உயர் மின் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், மாற்று வழியில் இத்திட்டப்பணிகளை செயல்படுத்துவது பற்றியும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post