திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்தது தொடர்பாக, பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ளது ஜி.குரும்பப்பட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். வாயில் மின்சார வயரைக் கடித்த நிலையில் இருந்த சடலத்தில் பல இடங்களில் கீறல்களும் ரத்தக்காயங்களும் இருந்தன. வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த சிறுமியின் பெற்றோர், இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை செய்த போலீசார், சிறுமியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்களது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், வீட்டின் அருகே வசிக்கும் 3 சிறுவர்களுக்கு இதில் தொடர்புள்ளது என்றும் அச்சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது அதே பகுதியைச் சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் கிருபாநந்தனைக் கைது செய்துள்ளனர் வடமதுரை போலீசார். வீட்டில் தனியாக இருந்த சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அதன்பின்னர் அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Discussion about this post