சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் கட்டமைப்புப் பணிகள் வேகமெடுக்கத் துவங்கியுள்ளன.
அரசியலுக்கு வருவதாய் அறிவித்து ரஜினி மக்கள் மன்றத்தை துவங்கிய நடிகர் ரஜினிகாந்த், மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர்களுக்கு வாக்களியுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி இருந்தார். தேர்தலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் என்றும், சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். சில நாட்களுக்கு முன்பாக பேசிய ரஜினியின் சகோதரர் ரஜினி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
ரஜினி இவ்வாறு கூறியிருக்கும் நிலையில் வேலூர் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி இன்று (ஏப்ரல் 27) கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “சட்டமன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்ற தலைவரின் அறிவிப்புக்கு ஏற்றவாறு இதுவரை நம் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாக நடைபெற்றுவந்த அரசியல் கட்டமைப்புப் பணிகளை தொடர்ந்து செய்து, விடுபட்ட வேலைகளை முடிக்க வேண்டும். தலைவர் சந்திக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும், அவர் நிகழ்த்தப்போகும் அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்று தலைவரின் வெற்றியை உறுதியாக்குவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ரஜினிகாந்த் இட்ட வாய்மொழி உத்தரவை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மன்றத்தின் கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு முதலாவதாக வேலூர் மாவட்டத்திற்கே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படியே வேலூர் மாவட்டத்திலிருந்து அந்தப் பணியை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post