3 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் நீதிமன்றம் செல்லாமல் தேர்தலை சந்திக்க சொல்வோம் என்று அமமுக நிர்வாகி வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாக அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் தினகரன் ஆதரவாளர்களாக செயல்பட்டுவருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் இணைந்து சந்தித்த கொறடா ராஜேந்திரன், “கட்சிக்கு எதிராக செயல்படும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளித்தார். ஆனால் தாங்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மூவரும் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை அடையாறிலுள்ள அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இல்லத்தில் அவரை, அமமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வெற்றிவேல் இன்று (ஏப்ரல் 27) சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கொறடாவின் பரிந்துரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
“தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தினால் மூவரையும் தங்கள் பக்கம் கொண்டுவரலாம் என்று எண்ணி குறுக்கு வழியில் தகுதி நீக்க முயற்சியில் ஈடுபடுகின்றனர். சட்ட ரீதியாக அவர்கள் அமமுகவில் இல்லை. அதிமுக என்றே எப்போதும் சொல்கிறார்கள். இப்போதும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள். எங்களுடன் பேசுவார்கள், பழகுவார்கள், வெற்றிபெற்றால் இரு தரப்பும் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்று சொல்வார்களே தவிர, அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எந்த இடத்திலும் அவர்கள் சொல்லவில்லை” என்று விளக்கினார்.
திமுகவுக்கு ஆதரவளித்த தமிமுன் அன்சாரி மீதும், அதிமுகவுக்கு எதிராக பேசிய கருணாஸ் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய வெற்றிவேல், “3 பேரின் மீதும் நடவடிக்கை எடுத்தால் அவர்கள் பக்கம் நாங்கள் இருப்போம். நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டாம், தேர்தலில் நின்று வெற்றிபெறலாம் என அவர்களிடம் ஆலோசனை சொல்வோம்” என்றும் குறிப்பிட்டார். சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டுவருகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
அதிமுகவில் கோஷ்டி பூசல் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “நிறைய கோஷ்டி பூசல்கள் உள்ளன. இடைத் தேர்தலில் எங்கள் கட்சியின் 22பேரும் வெற்றிபெற்று வந்தால் அதிமுகவில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துதான் ஆட்சியைப் பிடிப்போம். அதிமுகவில் உள்ள எங்களின் ஸ்லீப்பர் செல்கள் தொடர்ந்து எங்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல்கள் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.தகுதி நீக்கம் செய்யப்பட்டால் மூவருக்கும் அமமுக சார்பில் சீட் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என்றும் வெற்றிவேல் குறிப்பிட்டார்.
Discussion about this post