இலங்கை முழுதும் சுமார் 140 ஐஎஸ் இயக்கத்தினர் பரவியிருக்கிறார்கள். அவர்களை முற்று முழுதாக பிடித்துவிடுவோம் என்று நேற்று இலங்கை அதிபர் சிறிசேனா கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
அதன்படியே நாடு முழுதும் சந்தேகத்துக்கு உரிய இடங்களில் போலீஸாரும் ராணுவத்தினரும் சிறப்பு அதிகாரத்தின்படி கடுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வகையில் நேற்று இரவு அம்பாரா மாவட்டம் சாய்ந்த மருது என்ற இடத்தில் உள்ள வீட்டில் வெடி பொருட்களுடன் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து ராணுவத்தினர் அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அப்போது ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், 15 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் ஆறு பேர் குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது. சில மணி நேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த 15 பேரில் இருவர் ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதுபற்றி இலங்கை ராணுவத்தின் பத்திரிகைக் குறிப்பில், “ உளவுத் தகவல்களின் அடிப்படையில் அந்த வீட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகள் வெடிபொருட்களுடன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து வெள்ளிக் கிழமை மாலையே அந்த வீட்டை பாதுகாப்புப் படையினர் சூழ்ந்துகொண்டனர். அப்போது உள்ளே இருந்து படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பதிலுக்கு படையினரும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னர் அந்த வீட்டில் இருந்து டெட்டனேட்டர்கள், வெடிபொருட்கள், ஆசிட் பாட்டில்கள், தற்கொலை குண்டுதாரிகளின் சிறப்பு உடைகள், ஐஎஸ் இயக்கத்தினரின் கொடிகள், பேனர்கள், ராணுவ உடைகள் போன்றவை கைப்பற்றப்பட்டிருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
ராணுவத்தினருக்கும் வீட்டில் இருந்தோருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டின் இடையே வீட்டுக்குள் இருந்த வெடிபொருட்களை வெடிக்க வைத்திருக்கிறார்கள் என்றும் அதனால்தான் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இலங்கைத் தீவு முழுதும் சோதனை பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
Discussion about this post