ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் 4ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 306 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சொத்து விவரங்கள், கல்வி விவரங்கள் மற்றும் குற்ற வழக்கு பின்னணி தொடர்பான விவரங்களை வேட்பாளர்களின் வேட்பு மனுவை ஆய்வு செய்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டு வருகிறது. இதன்படி 4ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 943 வேட்பாளர்களில் 928 வேட்பாளர்களின் சொத்து விவரங்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வு செய்துள்ளது.
இந்த 928 வேட்பாளர்களில் 306 பேர் கோடீஸ்வரர்களாவர். அதாவது 33 விழுக்காடு கோடீஸ்வர வேட்பாளர்கள் 4ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 106 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர். அங்கு 320 பேரின் வேட்பு மனுக்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 145 வேட்பாளர்களில் 57 பேரும், ராஜஸ்தானில் போட்டியிடும் 115 பேரில் 44 பேரும், மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடும் 104 பேரில் 25 பேரும், மேற்கு வங்கத்தில் போட்டியிடும் 68 பேரில் 22 பேரும், பிகாரில் போட்டியிடும் 66 பேரில் 13 பேரும், ஜார்கண்டில் போட்டியிடும் 58 பேரில் 19 பேரும், ஒடிசாவில் போட்டியிடும் 52 பேரில் 17 பேரும் கோடிஸ்வரர்கள் ஆவர்.
கட்சி வாரியாகப் பார்த்தால் பாஜக சார்பில் போட்டியிடும் 57 வேட்பாளர்களில் 50 பேரும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 57 பேரில் 50 பேரும் கோடீஸ்வரர்கள் ஆவர். பாஜக சார்பில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.29 கோடியாகவும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13 கோடியாகவும் உள்ளது. சுயேட்சையாகப் போட்டியிடும் 345 பேரில் 57 பேர் கோடீஸ்வரர்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 54 பேரில் 20 பேரும், சிவசேனா சார்பில் போட்டியிடும் 21 பேரில் 13 பேரும், பிரகதிஷில் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடும் 12 பேரில் 7 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் 6 பேரும் கோடீஸ்வரர்கள் ஆவர்.
மத்தியப் பிரதேசத்தின் சிஹின்வாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நகுல் நாத் அதிகபட்சமாக ரூ.660 கோடிக்கும் மேல் சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளார். வஞ்சிட் பகுஜன் ஆக்ஹதி கட்சியின் சார்பில் மும்பை தெற்கு மத்திய போட்டியிடும் சஞ்சய் சுஷில் போஷலே ரூ.125 கோடிக்கு அதிகமாகச் சொத்து இருப்பதாகவும், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அணுராக் ஷர்மா ரூ.124 கோடிக்கும் அதிகமாகச் சொத்து இருப்பதாகவும் வேட்பு மனுவில் தாக்கல் செய்துள்ளனர்.
மிகக் குறைவான சொத்து வைத்திருப்பவர்களில் ராஜஸ்தானின் ஜலாவர் பரணில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரின்ஸ் குமார் 500 ரூபாய் மட்டுமே இருப்பதாக தாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தானின் சொத்தோர்கார்க் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சாம்சுதீன் 786 ரூபாய் இருப்பதாகவும், மும்பை வடகிழக்கு தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பாபன் சோபன் தோகே 1,100 ரூபாய் இருப்பதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post