பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். முன்னதாக வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் மோடி பங்கேற்றார். பின்னர் கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்நிலையில் பேரணியில் மோடி பங்கேற்பதற்காக வாரணாசி சாலையை கழுவி சுத்தப்படுத்த 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், பிரதமர் வருவதால் சாலையை சுத்தப்படுத்தி தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டுமென தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணிக்கு 40க்கும் அதிகமான தண்ணீர் டேங்கர் லாரிகளும், 400 தொழிலாளர்களும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக வாரணாசி சாலைகள் பண்டிகை, திருவிழா நாட்களில் மட்டுமே கழுவப்படும் என்றும் கூறப்படுகிறது. வாரணாசியில் 70 சதவீத மக்களுக்கு மட்டுமே குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கும் நிலை தற்போது உள்ளது என்றும் மற்றவர்கள் போர் மூலமே தண்ணீர் தேவையை பயன்படுத்தி கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குடிநீரை பிரதமரின் வருகைக்காக சாலையைக் கழுவ பயன்படுத்தியது கண்டிக்கத்தக்கது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பரப்புரையில் பேசிய மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அடுத்த 5 வருடத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைக்க வழிவகைசெய்யப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post