தானே ரயில் நிலையத்தில் பெண் ஒருவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு உதவிகரமாக இருந்த மருத்துவ பணியாளர்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்தார்.
மும்பையை சேர்ந்த பூஜா சவுகான் என்ற 20 வயது கர்ப்பிணி இன்று காலை கொங்கன் கான்யா விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். அந்த நேரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து உடனடியாக ரயிலானது தானே ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து ஸ்ட்ரெச்சர் மூலம், அருகில் செயல்பட்டு வந்த 1 ரூபாய் கிளினிக்கிற்கு பூஜா கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் உதவியால் பூஜாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயல், மருத்துவமனை ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் 1 ரூபாய் கிளினிக் செயல்பட்டு வருகிறது. வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த கிளினிக், பயணிகளுக்கு அவரச காலத்தில் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதியும் கூட தானே ரயில் நிலையத்தில் உள்ள 1 ரூபாய் கிளினிக்கில் பெண் ஒருவருக்கு ஆழகான குழந்தை பிறந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெண்ணுக்கு அதே ரயில் நிலையத்தில் மருத்துவர்களின் உதவியால் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணிகள் மட்டுமல்லாமல் பலருக்கும் 1 ரூபாய் கிளினிக் உதவி வருவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post