தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வறுமை மிகுந்த குடும்பத்திலிருந்து வந்த தமிழக வீராங்கனையான கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப்போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். அவருக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுவுக்கு திமுக சார்பில் 5 லட்சம் பரிசாக வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதுதவிர கோமதி மாரிமுத்துவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்தவொரு பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையாக உழைத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற தங்க மங்கை கோமதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது திறமையை ஊக்குவிக்கவே இந்தப் பரிசு வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post