நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாம் முறையாக விஜய் நடித்துள்ள படம் சர்கார். இதில் கீர்த்தி சுரேஷ் விஜய்-க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில், வரலெட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ.கருப்பையா ஆகியோரும் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த அக்டோபர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகிறது.
இந்நிலையில் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், சர்க்கார் படத்தின் கதை தன்னுடையது என்று கூறியுள்ளார். ‘செங்கோல்’ என்று தலைப்பிடப்பட்ட ஒரு கதையை 2007ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அதனை திருடி உருவாக்கப்பட்டதே ‘சர்கார்’ படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ், தலைமையிலான எழுத்தாளர் சங்கம் இதுகுறித்து விசாரிக்க முடிவெடுத்துள்ளது. இதற்கு முன்னதாக விஜய், முருகதாஸ் கூட்டணி இணைந்திருந்த கத்தி படத்திற்கும் இதேபோன்றோரு பிரச்சனை எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post