பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் ரம்யா நம்பீசன் இணைந்துள்ளார்.
குணச்சித்திர நடிகராகத் தன்னை நிரூபித்த பாபி சிம்ஹாவுக்கு கதாநாயகனாகப் பெரிய வெற்றி அமையவில்லை. உறுமீன், பாம்புச் சட்டை, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, கோ-2, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் கதாநாயகனாக ஒரு ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாபி சிம்ஹா ‘அக்னி தேவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை கோவையில் பூஜையுடன் கடந்த ஜூன் மாதம் தொடங்கினார்.
சென்னையில் ஒருநாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால் ராஜுடன் இணைந்து அறிமுக இயக்குநர் ஷாம் சூர்யாவும் இதை இயக்குகிறார். சியாண்டோ ஸ்டுடியோ மற்றும் ஜெய் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. ராஜேஷ் குமாரின் கிரைம் நாவல் ஒன்றைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தொடங்கிய பின்னரும் படத்தின் நாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. அதன்பின் ரம்யா நம்பீசன் கதாநாயகியாக ஒப்பந்தமானார்.
படப்பிடிப்பு நடைபெற்றுவந்த நிலையில் தற்போது ரம்யா நம்பீசன் படக்குழுவுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவோடு காமெடி நடிகரான சதிஷுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவையைச் சுற்றியே படமாக்கப்படுகின்றன. ரோஜா படம் மூலம் பிரபலமான நடிகை மதுபாலா இந்த படத்தில் வில்லியாக நடிக்கிறார்.
Discussion about this post