நடிகை சோனம் கபூர் ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார். வழக்கமாக ஒரு நடிகை ட்விட்டரிலிருந்து செல்கிறார் என்றால், அங்கு பால்குடம் எடுப்பது மட்டும் தான் நடக்காது. மற்றபடி, அவரது பிரிவிற்காக பல ரசிகர்கள் சோகமடைவார்கள். ஆனால், சோனம் கபூர் சர்ச்சையில் தற்போது அவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ட்விட்டரிலிருந்து விலகியது குறித்து சோனம் கபூர் “கொஞ்ச காலம் ட்விட்டரிலிருந்து விலகியிருக்கலாம் என்று விரும்புகிறேன். இங்கு எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு அன்பும், அமைதியும் கிடைக்க வாழ்த்துகள்” என்று கூறியிருக்கிறார். 33 வயதே ஆன பாலிவுட்டின் கனவுக் கன்னிகளில் ஒருவராக வலம் வரும் சோனம் கபூரின் இந்நிலைக்கு காரணம் என்னவென்று பார்ப்போம்.
நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளுக்கு எல்லையே இல்லை. பிரபலமாக இருப்பதாலும், எப்போதும் கேமரா வெளிச்சம் விழுவதாலும் அவர்களது ஒவ்வொரு அசைவையும் விமர்சிக்கும் டிஜிட்டல் உலகம், தனது எல்லையைத் தாண்டி அவர்களது உடல் வரை விமர்சனத்தைக் கொண்டு செல்லும். இதனை பாலியல் தொல்லைகளாக நடிகைகள் அவ்வப்போது குறிப்பிடுவது உண்டு. அதற்காக சட்டத்தை அணுகுவதும் உண்டு. ஆனால், சோனம் கபூர் செய்த சம்பவம் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக போராடுபவர்களையே அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ட்டிங்குக்காக தனது இல்லத்திலிருந்து கிளம்பிய சோனம் கபூர் வாகன நெரிசலின் காரணமாக, காரில் அமர்ந்திருந்தபோது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றைத் தட்டிவிட்டார். “நான் நகரத்துக்குள் வருவதற்கே 2 மணி நேரம் ஆகிவிட்டது. இன்னும் சேரவேண்டிய இடத்துக்கே வரவில்லை. இத்தனை வாகனங்களால் சாலைகளும் பாதிக்கப்படுகிறது, சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது” என்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்தார். அந்தப் பதிவை ட்விட்டரில் பகிர்ந்த அனந்த் வாசு என்கிற இளைஞன் “இதற்குக் காரணம் உங்களைப் போன்றவர்கள் பொதுவான போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தாமல், லிட்டருக்கு 3 அல்லது 4 கி.மீ மைலேஜ் கொடுக்கக்கூடிய சொகுசு கார்களில் செல்வதாலும், 10 அல்லது 20 ஏசி-க்களைக் கொண்ட சொகுசு பங்களாவில் வசிப்பதாலுமே உலக வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. முதலில் நீங்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க வழி பாருங்கள்” என்று கூறியிருந்தார். இவர் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்து, சோனம் கபூரின் ரசிகர்கள் உட்பட பலரும் அவரை பாராட்டினார்கள்.
அனந்த் வாசுவுக்கு பாராட்டு மழை பொழிந்துகொண்டிருந்த நேரம், திடீரென களத்துக்கு வந்தார் சோனம் கபூர். இந்த கமெண்டுக்கு அவர் ரிப்ளை செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களது பதிலில் தெரிந்தது. ஆனால், என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசிவிட்டார் சோனம் கபூர்.
“உங்களைப் போன்ற ஆண்களால் தான், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவோம் என பெண்கள் தயங்குகிறார்கள்” என்று ஒரு போடு போட்டது தான் தாமதம். மொத்த ட்விட்டர் உலகமும் சோனம் கபூரை சூழ்ந்துகொண்டது.
தனி மனிதனின் சொகுசுக்காக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை விமர்சிக்க சோனம் கபூருக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதுபோலவேதான் பிரபலங்களின் சொகுசு வாழ்க்கைக்காக சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைக் கேட்க சாமான்யன்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதற்கு தகுந்த வழியில் பதிலளிக்காமல், உடனே ‘பாலியல் தொல்லை தருகிறவர்’ என்று தனிமைப்படுத்த முயன்ற சோனம் கபூருக்கு ஆதரவாக யாருமே நிற்கவில்லை. ஆண், பெண், திருநங்கை என பாலின பேதமின்றி சோனம் கபூரை அனைவரும் விமர்சித்தனர். இதன் விளைவாகவே சோனம் கபூர் ‘எதிர்மறையான எண்ணங்கள் அதிகம் இருக்கிறது’ எனக் கூறி ட்விட்டரை விட்டுக் கிளம்பிவிட்டார். இன்ஸ்டாகிராம் போஸ்ட், ட்விட்டரில் பேசிய ரிப்ளை ஆகியவற்றையெல்லாம் டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post