சர்கார் படம் குறித்து ஊடகங்களுக்கு துணை நடிகர்கள் யாரும் பேட்டி கொடுக்கக் கூடாது; மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் பணிகள் குறித்து முறையாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் வரலட்சுமி.
விஜய், கீர்த்தி சுரேஷ் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் சர்கார். வரலட்சுமி வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராதாரவி, பழ.கருப்பையா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய், முருகதாஸ் இயக்கத்தில் ஏற்கெனவே நடித்த கத்தி, துப்பாக்கி படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளத்திலும் நல்ல ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழில் வெளியாகவுள்ள நிலையில் அதே நாளில் தெலுங்கிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு பதிப்பிற்கான டப்பிங் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
தமிழ்த் திரையுலகில் தங்களது கதாபாத்திரங்களுக்கு தாங்களே டப்பிங் பேசும் நடிகைகள் மிகவும் குறைவு. வரலட்சுமி ஆரம்பத்தில் இருந்தே தனது கதாபாத்திரத்திற்கு தானே டப்பிங் பேசிவருகிறார். அவரது நடிப்பைப் போல அவரது குரலும் தனித்துவமானது. தற்போது வரலட்சுமி தெலுங்கிலும் டப்பிங் பேசிவருதாக கூறியுள்ளார். டப்பிங் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி அவர் தொண்டை கரகரப்புடன் தெலுங்கு டப்பிங் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
Discussion about this post