படங்களில் காதலர்களாக இணைந்து நடிக்கும் நடிகர், நடிகைகளின் படங்கள் வெற்றிகரமாக ஓடினால் அவர்களை மையமாக வைத்து வதந்தி பரப்பப்படுவது தமிழ் சினிமாவின் வழக்கமாக மாறிவருகிறது. தற்போது 96 படத்தில் நடித்த அறிமுக நடிகர், நடிகை இப்பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.
விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் 96, கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ஓடிவருகிறது. படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரது நடிப்பைப் போலவே இவர்களது இளவயது கதாபாத்திரங்களில் நடித்த ஆதித்யா பாஸ்கர், கௌரி ஆகியோரின் நடிப்பும் பெரியளவில் பேசப்பட்டது.
இந்த ஜோடி சமூக வலைதளங்களில் தற்போது விவாதப்பொருளாகியுள்ளனர். இருவரும் உண்மையிலேயே காதலர்கள் என்பதாக வதந்தி பரப்பப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகை கௌரி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆதித்யாவும் நானும் காதலர்கள் அல்ல. ராம், ஜானு என்ற காதலர்களாகத் திரைப்படத்தில் நடித்தோம்; திரைப்படத்துக்கு வெளியே அல்ல. தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த ட்விட்டை பகிர்ந்த ஆதித்யா பாஸ்கர், “நானும் கௌரியும் சிறந்த நண்பர்கள், காதலர்கள் அல்ல. நடிகர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.
Discussion about this post