வைரமுத்து மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார் ‘பெயர் சொல்ல விரும்பாத ஒரு பெண்’.
சமீப காலமாக இசைத்துறையில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் பாலியல் தொல்லைகள் குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. பிரபல பாடகி சின்மயி இசைத் துறையின் பல்வேறு தளங்களிலும் எப்படியெல்லாம் பெண்களை பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தொடர்ந்து பேசி வருகிறார். தற்போது வைரமுத்து மீது வைக்கப்படும் குற்றச்சாட்டையும் ஆமோதிக்கும் விதத்தில், பெண் பத்திரிகையாளர் ஒருவர் பதிவு செய்த ட்வீட்டினை ரீ-ட்வீட் செய்திருக்கிறார் சின்மயி.
பெயர் சொல்ல விரும்பாத அந்தப்பெண், தனக்கு அனுப்பிய தகவலாக வைரமுத்து மீதான குற்றச்சாட்டை வெளியிட்டிருக்கும் ட்வீட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது…
18 வயதில் அவருடன் ஒரு புராஜெக்டுக்காக வேலை செய்ய நேர்ந்தபோது மிகவும் நல்லவராகவே தெரிந்தார். ஒரு ஜாம்பவானாக, பிரபல கவிஞராக, தேசிய விருது வென்றவராக நான் மதித்தேன்.
ஒருமுறை, பாடல் வரிகள் குறித்து விளக்கம் தருவதற்காக என்னிடம் வந்து கட்டி அணைத்து, முத்தம் கொடுத்தார். என்ன செய்வதென்றே தெரியாமல், அவருக்கு நன்றியை மட்டும் சொல்லிவிட்டு நான் அவர் வீட்டிலிருந்து ஓடிவிட்டேன்.
அவரது வீடும் அலுவலகமும் கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். யாராக இருந்தாலும் அங்கு தான் சந்திப்பார் என்று நம்புகிறேன்.
அதன் பிறகு, அந்த வீட்டில் நான் தனியாக அவரை சந்திப்பதைத் தவிர்த்து விட்டேன். பல சமயங்களில் அவருடன் தனித்திருக்க வேண்டிய தேவையை என் பணி கொண்டிருந்தாலும், என்னுடன் யாரையாவது வைத்திருப்பதை நான் உறுதிசெய்து கொண்டேன்.
வைரமுத்து இவ்வளவு மோசமானவர் என்பது சினிமா துறையில் அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், அவரது அரசியல் செல்வாக்கு காரணமாகவும், அதை வைத்துப் பல பாதிக்கப்பட்டவர்களை அவர் அமைதியாக்கியதாலும் யாரும் இதற்கு முன்வரவில்லை. எனக்கு இப்படித்தான் நேர்ந்தது. இதுதான் உண்மை. நான் யாரென்று தெரியாமல் இருக்கவே விரும்புகிறேன். நன்றி. எனக்கு ஏற்பட்ட உதறலை என்னால் நிறுத்த முடியவில்லை.
இப்படியாக முடிந்திருக்கும் அந்தத் தகவலைப் பதிவு செய்த பெண் பத்திரிகையாளர், அதற்கு வந்த பின்னூட்டங்களின் காரணமாக நீக்கிவிட்டார். எனவே, அதற்கு சின்மயி செய்த ரீ-ட்வீட்டும் காணாமல் போய்விட்டது. ஆனால், அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர். வைரமுத்துவின் எண்ணுக்கு அழைத்துப் பேச முயன்றபோது லைன் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்டவர் முகம்காட்ட விரும்பவில்லை. இதுபோன்றவர்கள் சினிமா துறையில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமாக ஒலிக்கின்றன. ஆனால், யாராக இருந்தாலும் காவல் துறையில் புகார் கொடுக்கப்படாத வரை தண்டனை கிடைப்பதென்பது அரிது. வைரமுத்து என்றில்லை; யாராக இருந்தாலும், பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினால், அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டியது அவசியம். ஆனால், பெயரும் சொல்ல விரும்பாமல் புகார் கொடுக்கவும் முன் வராமல், சமூக வலைதளங்களில் இப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புவதால் வைரமுத்துவின் புகழ் மீது வேண்டுமென்றால் கறை படியலாம். ஆனால், குற்றத்துக்குத் தண்டனை என்பது எட்டாக்கனியாகவே ஆகிவிடும் என்று ரியாக்ட் செய்கிறது சினிமா உலகம்.
Discussion about this post