திரைத்துறையில் பாலியல் தொல்லைகள் இருப்பதாக கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் பத்தாண்டு கால சினிமா வாழ்க்கையில் தனக்கு அவ்வாறான பிரச்சினைகள் ஏதும் ஏற்படவில்லை என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
மதுரையில் பிக்சி மொபைல்ஸ் என்ற செல்போன் கடையை நடிகை சமந்தா இன்று (அக்டோபர் 8) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எல்லாத் துறைகளிலும் உள்ளதைப்போல சினிமா துறையிலும் ஒரு சில கருப்பு ஆடுகள் உள்ளன. அவர்களால் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் பெயர் கெடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த சினிமாத் துறையின் பெயரையும் கெடுப்பதாக உள்ளது. ஆனால் சினிமாவில் எனக்கு எந்தக் குறையும் இல்லை. எனது பத்தாண்டு கால சினிமா வாழ்வில் இதுவரை எனக்கு எந்த விதமான பாலியல் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. சினிமா துறை என்பது எனக்கு கடவுளுக்கு சமமானது” என்று கூறியுள்ளார்.
சமந்தாவைக் காண பிக்சி மொபைல்ஸ் கடை வளாகத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். கடைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று சிறிது நேரம் சமந்தா பேசினார். அப்போது, “ஏராளமான ரசிகர்கள் என்னைப் பார்க்க வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னுடைய வெற்றியில் ரசிகர்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்” என்றார். பின்னர் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
Discussion about this post