நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. முன்னணி கதாநாயகர்களுக்கு நிகராக அடுத்தடுத்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் நயன்தாராவுக்கு தற்போது பல படங்கள் கைவசம் உள்ளன.
விஸ்வாசம், கொலையுதிர் காலம், லவ் ஆக்ஷன் டிராமா, சைரா நரசிம்ஹா ரெட்டி, அறிவழகன் இயக்கும் புதிய படம், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் படம் என நயன்தாரா பரபரப்பாக இயங்கிவருகிறார். இந்நிலையில் சர்ஜுன் இயக்கத்தில் இவர் நடிக்கும் ஐரா படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.
லட்சுமி, மா குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சர்ஜுன் வரலட்சுமி நடித்த எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் பகுதி மூலம் திரையுலகில் அறிமுகமானார். தற்போது இவர் நயன்தாராவை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு ஐரா படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் அவர் முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Discussion about this post