பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் கோலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாகப் பலரும் பேசிவருகின்றனர். தமிழ்த் திரையுலகிலும் இப்பிரச்சினை பரவலாக பேசப்பட்டுவரும் நிலையில் நடிகைகள் சமந்தா, வரலட்சுமி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின் சர்ச்சையின்போது தொடங்கப்பட்ட மீ டூ ஹேஸ்டேக் (#metoo) மற்றும் இயக்கம் உலக அளவில் பிரபலமாகியுள்ளது. பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா அளித்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில் தெலுங்கு, தமிழ்த் திரையுலகில் ஸ்ரீ ரெட்டியின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது வைரமுத்து மீது முகம் தெரியாத பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைத் துணிந்து வெளியில் சொல்வது எதிர்காலத்தில் இப்பிரச்சினை குறைவதற்கான காரணமாக இருக்கும் எனப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
பெண்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளைத் தடுக்கும்விதமாக சேவ் ஷக்தி என்ற அமைப்பைத் தொடங்கிய வரலட்சுமி, இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இதுபோன்ற சம்பவங்களை அதிகமாகக் கேட்பது அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது. காலம் தவறினாலும் சொல்லாமல் விடக் கூடாது என்று கூறுகின்றனர். தைரியமாக வெளியே வந்து தங்களது கதைகளைக் கூறிய பெண்களுக்கு நன்றி. கடந்த ஆண்டில் இருந்து நான் #metooவுக்காக நிற்கிறேன். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்களும் தங்களது உரிமைகளுக்காகப் போராட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “#metooவுக்கு வலுசேர்க்கும் விதமாக நிறைய பெண்கள் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது. பெண்கள் உட்பட வேறு சிலர் இதற்கு ஆதாரம் இருக்கிறதா எனச் சந்தேகத்துடன் கேட்பதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். நீங்கள் உங்கள் குரலால் பல பெண் பிள்ளைகளின் வாழ்க்கையைக் காப்பாற்றுகிறீர்கள். நன்றி. மீ டூ இந்தியா மூவ்மென்டுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post