தனது உயிரைக் கொடுத்து, கொள்ளையர்களிடம் இருந்து நான்கரை கோடி ரூபாய் வங்கிப் பணத்தை மீட்க உதவியுள்ளார் டெல்லியைச் சேர்ந்த காவலர் ஒருவர். இந்த சம்பவத்தில், தப்பித்துச் சென்ற கொள்ளையர்களைத் தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் டெல்லி போலீசார்.
கடந்த 8ஆம் தேதியன்று இரவு, ஜனக்புரியில் உள்ள வங்கியில் இருந்து ஒரு வேனில் பணத்தைச் சேகரித்துக்கொண்டு நோய்டா நகரம் நோக்கிச் சென்றனர் வங்கிப் பணியாளர்கள். அந்த வேனில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. ஓட்டுனர் ஒருவர் வேனை இயக்க, பாதுகாவலர் ஒருவரும் கணக்காளர் ஒருவரும் அந்த வேனில் பயணித்தனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, இரண்டு கார்களில் வந்த கொள்ளைக்கும்பல் ஒன்று வேனை மறித்தது.
காரில் இறங்கிவந்த ஒருவர், வேன் டிரைவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரைக் கீழே இழுத்துச் சண்டையிடத் தொடங்கினார். அதே நேரத்தில், பணம் ஏற்றிவந்த வேனின் பின்புறத்தைத் திறக்க முயற்சித்தனர் சில நபர்கள். ஓட்டுனரைக் கீழே தள்ளிய கும்பல், மற்ற இருவரையும் கடுமையாகத் தாக்கியது. தாக்குதல் முயற்சி நடைபெறவே, அவர்களைத் திரும்பத் தாக்க முயற்சித்தார் பாதுகாவலர் பிஷாம்பர் சிங். அப்போது, அவரைத் துப்பாக்கியால் சுட்டனர் கொள்ளையர்கள். இதில், அவரது கால் மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது.
அந்த இடத்தைப் பல வாகனங்கள் கடந்து சென்றதால், கொள்ளையர்களின் முயற்சி வெற்றி பெறாமல் போனது. இதுபற்றித் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அதற்குள், அந்த வழியாகச் சென்ற ஒருவரின் உதவியினால், பிஷாம்பர் சிங் மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
தன் உயிரைத் தந்து வங்கிப் பணத்தைக் காப்பாற்றியுள்ளார் பிஷாம்பர் சிங். டெல்லி அரசும் மத்திய அரசும், இவரது தைரியத்தைப் போற்றும் வகையில் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை….
Discussion about this post