சிம்பு, நயன்தாரா குறித்து கெட்டவன் பட இயக்குநர் ஜி.டி.நந்து கூறியிருக்கும் தகவல் கோலிவுட்டில் தற்போது புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிம்பு நடித்துப் பாதியிலேயே நிறுத்தப்பட்ட கெட்டவன் படத்தை இயக்கிய ஜி.டி.நந்து நியூஸ்7 சேனலில் பிரத்யேக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். அப்போது சிம்பு, நயன்தாரா பற்றிப் பேசிய அவர், “கெட்டவன் படத்தை சிம்புவை வைத்து இயக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போதைக்கு இதில் நடிக்க முடியாது என சிம்பு கூறவே அடுத்ததாக நடிகர் தனுஷை அணுகலாம் என முடிவெடுத்தேன்.
அதன்படி இயக்குநர் பூபதி பாண்டியனிடம் தனுஷுக்கு என்னிடம் கதை இருப்பதாகவும் அதை தனுஷிடம் நீங்கள் கூறுங்களென்றும் சொன்னேன். தனுஷை நேரில் சந்தித்துப் பேசவேயில்லை. இதற்கிடையே சிம்பு நாமே இதைப் பண்ணலாம் என மறுபடி கூறினார். எனவே அதற்கு ஆயத்தமானேன். ஆனால் தனுஷிடம் நான் கதை சொன்னதாகக் கருதிக்கொண்டு சிம்பு என் மீது கோபப்பட்டார். அங்கிருந்துதான் இப்படத்திற்கான பிரச்சினையே தொடங்கியது” என்றார்.
சிம்பு, நயன்தாரா குறித்துப் பேசியபோது “ சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாற்றித் திருமணம் நடைபெற்றது. அது எனக்குத் தெரியும். அவர்கள் இருவரும் பிரிந்ததற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்து ஒரு விஷயம் முக்கியமான காரணமாக இருக்கலாம் என நினைக்கிறேன். திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் இருந்த ஜோசியர் ஒருவரை நானும் சிம்பு தரப்பில் ஒருவரும் சென்று சந்தித்தோம்.
சிம்பு, நயன்தாரா இருவரின் ஜாதகங்களைப் பார்த்த அந்த ஜோசியர், ‘நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெற்றால் அவர் தெருவுக்குத்தான் வர வேண்டிய நிலை இருக்கிறது. அவருக்கு திருமணம் நடைபெறாமல் இருந்தால் சி.எம். ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது’ என கூறினார். எனவே இதுதான் அவர்கள் பிரிந்ததற்கான காரணமாக இருக்கும் எனக் கருதுகிறேன்” என்றார்.
நந்து கூறிய இந்தத் தகவல் சினிமா வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
Discussion about this post