நம்முடைய கால் பாதம் 5 விரல்களையும் அதனுள் 26 எலும்புகளையும், 33 மூட்டுக்களையும், சுமாராக 42 தசைகளையும், 2 லட்சத்து 50 ஆயிரம் வேர்வை சுரப்பிகளையும் உள்ளடக்கியது. ஒரு மனிதன் சுமாராகத் தன் வாழ்நாளில் 1 லட்சத்து 15 ஆயிரம் மைல்கள் நடக்கின்றான். நடக்கும்போது நம் உடலின் எடையின் அழுத்தத்தை சுமக்கும் பாதமானது ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான டன் எடை சக்தியை கையாளும் திறன் கொண்டது.
காலில் ஏற்படும் பிரச்சனைகளும்…. அதற்கான தீர்வுகளும்
இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பும், காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் உங்கள் பாதங்களை நீரில் கழுவி உங்களின் பாதத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தலாம். நீரிழிவு நோயாளிகள் இதனை செய்ய வேண்டாம்.
செருப்பு அணியாமல் நடந்தால் அழுக்கு சேர்ந்து நாளடைவில் பாதத்தில் அதிக அழுத்தம் உள்ள இடங்களில் தோல் தடித்துக் கொள்கிறது. இதுவே கால் ஆணியாக மாறுகிறது. எனவே, வீட்டுக்குள்ளும் செருப்பு அணிந்துகொள்வது முக்கியம்.
அதிகநேரம் தண்ணீரில் வேலை செய்யும் பெண்களுக்கும், பாதங்களை சுகாதாரமாக பராமரிக்காதவர்களுக்கும் சேற்றுப்புண், பித்தவெடிப்பு போன்றவை ஏற்படும். இவர்கள் காலை, மாலை இரண்டு வேளையும் மெல்லிய சோப்பு நீரால் கழுவிவிட்டு, விரல்களுக்கு நடுவிலும் நன்றாக துடைத்து உலரவிட வேண்டும். தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதால் எறும்பு, எலி கடித்துவிட வாய்ப்புண்டு. அதனால் மினரல் ஆயில், லிக்விட் பாரஃபின் அல்லது வாசலைன் போட்டுக் கொள்ளலாம். சேற்றுப்புண்ணுக்கு பூஞ்சை எதிர்ப்பு களிம்புகளை தடவிக்கொள்ளலாம்.
தனிப்பட்ட நோய்க்கு மாத்திரை, மருந்துகள் சாப்பிடுவதால் கூட சிலருக்கு கால்வீக்கம் வரக்கூடும். ஒரு கால் மட்டும் வீங்கியிருந்தால் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும். எங்காவது அடிபட்டு, அதை கவனிக்காமல் விட்டுவிடுவதால் கால்வீக்கம் ஏற்படும். மருத்துவரை அணுகி வீக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நம் பாதம் மண் தரை மற்றும் கரடு முரடான தரைகளில் நடப்பதற்கேற்ற வகையில் வடிவமைப்பைக் கொண்டது. இன்றோ மார்பிள், மொசைக் தரைகளில் செருப்பு அணியாமல் நடக்கிறோம். இதனால் பாதங்களில் அழுத்தம் ஏற்படுவதாலும், குதிகால் வலி வருகிறது. இதற்கு சில எளிய பயிற்சிகள் உள்ளன. ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். இவற்றை செய்வதால் குதிகால் வலியிலிருந்து விடுபடலாம்.
Discussion about this post