சசிகலா அதிமுகவின் உறுப்பினர் கிடையாது” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்றது. நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் . நிகழ்வில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் புதிய உறுப்பினர் அட்டையை அவரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
நிகழ்வில் பேசிய பன்னீர்செல்வம், “ ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அதிமுக என்னும் எஃகுக் கோட்டையை உருவாக்கியவர் ஜெயலலிதா. அதிமுகவிற்கு வந்த எல்லாப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொண்டார். தற்போது தொண்டர்களால் அதிமுக வழிநடத்தப்படுகிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஏற்கனவே பழைய உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துள்ளனர். புதிதாகவும் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் அதிமுக உறுப்பினர்களாக 1 கோடியே 10 லட்சத்து 41ஆயிரத்து 600 பேர் சேர்க்கப்பட்டு அதிமுகவுக்கு வலிமை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 6 மாதங்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் புதுப்பிப்பார்கள், புதிதாகவும் சேருவார்கள்” என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பன்னீர்செல்வம், “அதிமுக என்னும் இயக்கம் எங்களிடம்தான் இருக்கிறது. தொண்டர்களும் எங்களிடம்தான் இருக்கிறார்கள். பொதுமக்களும் எங்களுக்குத்தான் ஆதரவு தெரிவிக்கின்றனர். தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்துவிட்டார். அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏற்கனவே சசிகலா பொதுக்குழு மூலமாக நீக்கிவைக்கப்பட்டுவிட்டார். அவரிடமிருந்த பொறுப்புகளும் எடுக்கப்பட்டுவிட்டன. அவர் இங்கு அடிப்படை உறுப்பினரே கிடையாது” என்று தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரத்தின சபாபதி, கலைச்செல்வன், பிரபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மூவரிடமும் விளக்கம் கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
“கட்சியில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. நாங்களெல்லாம் உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்துவிட்டோம். இதில் சேராதவர்கள் கட்சியில் இல்லாதவர்கள். சசிகலா புதிய உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை. அதனால் அவர் கட்சியில் இல்லை” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post