விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.
தமிழ் சினிமாவில் காவல்துறையை மையமாகக் கொண்டு வெளிவரும் படங்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளது. சாமி 2, ராஜா ரங்குஸ்கி, செக்கச்சிவந்த வானம், ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து காவல்துறையை மையமாகக் கொண்டு வெளியாக உள்ளது விஜய் ஆண்டனி நடித்துள்ள திமிரு புடிச்சவன் திரைப்படம். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
காவல்துறையின் பெருமைகளை விஜய் ஆண்டனி கூறுவதாக டீசர் தொடங்குகிறது. விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரியாக நிவேதா பெத்துராஜும் ஆக்ஷன் காட்சிகளில் ஈடுபட்டுள்ளார். டீசர் முழுக்க வன்முறை, ஆக்ஷன் காட்சிகள் நிரம்பியுள்ள நிலையில் பின்னணியில் ‘வேலவா வெற்றி வேலவா மயிலேறி வா” என்ற பாடல் ஒலிக்கிறது. ‘போலீஸ்கிட்டேயேவா’ என ரவுடிகளை விரட்டிப்பிடித்து அடிக்கும் நிவேதாவின் கதாபாத்திரம் நாச்சியார் படத்தில் நடித்த ஜோதிகாவை நினைவுபடுத்துவதாக உள்ளது. சிறுவர்கள் துப்பாக்கி ஏந்தி சண்டை போடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் நிரம்பிய பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளதை டீசரைப் பார்க்கும் போது உணரமுடிகிறது.
கணேஷா இயக்கியுள்ள இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். இப்படம் விஜய் நடிக்கும் சர்கார் படத்திற்குப் போட்டியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
Discussion about this post