தற்போதுள்ள ஹீரோயின்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா. பாகுபலி, பாகமதி என வெற்றி படங்களை கொடுத்தபோதும் புதிய படங்களை ஏற்காமல் அமைதி காத்து வருகிறார். பிரபாஸ் நடித்து வரும், ‘சாஹோ’ படத்தில் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்ய எண்ணியபோது அவரது குண்டான தோற்றத்தால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை. முன்னதாக தமிழில் அவர் நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக உடல் எடையை 100 கிலோவாக உயர்த்தி நடித்தார்.
அதன்பிறகு அந்த எடையை குறைக்க முயன்றதில் ஓரளவுக்கே பலன் கிடைத்தது. எடை குறைந்தாலும் ஒல்லியான தோற்றம் கிடைக்காமல் கவலை அடைந்தார். நண்பர்கள், தோழிகள், சக நடிகைகள் தந்த ஆலோசனையின்படி தென்னிந்தியாவில் பல்வேறு உடல் எடை குறைப்பு பயிற்சி இடங்களுக்கு சென்று வந்தார் அனுஷ்கா. அப்போதும் போதிய பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து ஒல்லியாகத்திரும்புவது என்ற முடிவோடு ஆஸ்திரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்.
அனுஷ்காவின் திடீர் வெளிநாட்டு பயணம்பற்றி விசாரித்தபோது ருசிகரமான தகவல்கள் கிடைத்தன. ஆஸ்திரியாவில் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கும் பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. உடல் எடை குறைவதுடன், தோல் அழகும் மெருகூட்டப்பட்டு புதுப்பொலிவு அளிக்கப்படுகிறது. உணவுமுறையில் கட்டுப்பாடு எதுவும் விதிப்பதில்லை என்பது இதில் முக்கிய அம்சம். இது நட்சத்திரங்களை கவர்ந்திருக்கிறது.
இந்த பயிற்சிக்கு பிறகு இதுவரை பார்த்ததிலிருந்து புதிய வசீகர தோற்றத்தில் அனுஷ்காவை காண முடியும் என இந்த பயிற்சியாளர்கள் உத்தரவாதம் கொடுத்திருக்கின்றனராம். இதையறிந்து ஏற்கனவே சில நடிகர், நடிகைகள் ஆஸ்திரியா சென்று புதுப்பொலிவுடன் வந்திருக்கின்றனராம். ஆஸ்திரியாவிலிருந்து அனுஷ்கா திரும்பிவரும்போது இது அனுஷ்காதானா என்று ஆச்சர்யமாக கேட்கும் வகையில் அவரது தோற்றத்தில் பெரிய வித்தியாசம் தெரியும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு ஒன்றிரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள எண்ணி உள்ளாராம்.
Discussion about this post