பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இதை அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது. வணிக நோக்கில் தயார் செய்து விற்கப்படும் பிரியாணியில், அதன் நிறம், மணம், சுவை போன்றவற்றை அதிகப்படுத்துவதற்காக சிலர் நிறமூட்டிகள், சுவையூட்டிகள் போன்றவற்றை சேர்க்கின்றனர். இவற்றில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் சிலவற்றால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.
வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று தின்னாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்று எரிச்சல் உண்டாகிறது. மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது. இந்த உணவுகளால் சாப்பாட்டுக்குப் பின் வயிற்றில் அமிலங்கள் அதிகமாக சுரப்பதால் இப்பிரச்னை உண்டாகிறது. சாப்பிட்டதும் பலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுவதைப் பார்த்திருப்போம். 30 முதல் 50 சதவீதம் பேருக்கு இந்த பாதிப்பு இருப்பதாகவும், நூற்றில் 20 பேருக்கு இது அன்றாடப் பிரச்னையாக இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.’’
Discussion about this post