எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் விரைவில்தொடங்கப்படும் என்றும் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்பார் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை வருமா, வராதா? என மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், கடைசியில் அதற்கான நேர்மறையான நிகழ்வுகள் மத்தியில் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் சூடு பிடித்துள்ளன.
மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லியில் சந்தித்த பிறகு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் மதுரை தோப்பூரில் தொடங்கப்படும் என தமிழக மக்களிடையே நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சென்னை வருகை தந்த மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார். அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்புஸ் பெஷாலிட்டி மருத்துவ வசதியை தொடங்க தலா 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் 650 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி மையம் தொடங்கப்பட உள்ளதாகவும், இதனையும் பிரதமர் மோடியை தொடங்கி வைக்க கேட்டுக் கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கே 5 மாநிலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாரதிய ஜனதா அரசு தமிழக சுகாதாரத்துறைக்கு நிதியுதவிகளை அள்ளி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது
Discussion about this post