தமிழகத்தில் நடைபெற்று வரும் சிலைத் திருட்டு செய்திகளை பார்க்கும் போது, நாம் வணங்கும் ஸ்வாமி சிலைகள் அனைத்தும் உண்மைதானா. இல்லை அவை எல்லாம் போலியா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு வரத் தொடங்கி விட்டன.
அந்த அளவுக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொத்து கொத்தாக சிலைகளை திருடியவர்களிடமிருந்து பறிமுதல்செய்து வருகின்றர். தற்போது புதிதாக ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. சென்னை கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள 3 சிலைகள் திருடப்பட்டு போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவின்போது கோயிலில் உள்ள 3 சிலைகள் மாற்றப்பட்டதாகவும் அந்த சிலைகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மயிலாப்பூர் கோயில்களில் உள்ள சிலைகள் அனைத்தும் பழங்கால சிலைகள்தானா? இல்லை அவை போலியாக மாற்றப்பட்டுள்ளதா? என விசாரணை நடத்தும்படி சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
அதனைத் தாடர்ந்து சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு குழுவினர் ஆய்வு செய்ததில், கபாலீஸ்வரர் கோயில் உள்ள புன்னைவன நாதர் சிலை அருகே உள்ள மயில்சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், அதேபோல் நவக்கிரகங்களில் உள்ள ராகு கேது சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மற்றும் ஸ்தபதி முத்தையா ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post