சமீபகாலமாகப் பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த `மி டூ’ கேம்பைன் தமிழ் சினிமாவில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
`கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுப்பியதாகச் சில குறுஞ்செய்திகளை சந்தியா மேனன் என்கிற பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த ட்வீட்டர் பதிவை ரீ ட்வீட் செய்த பின்னணிப் பாடகி சின்மயி அதில், `அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்’ என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். மேலும் வைரமுத்துவால் தானே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.
2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. அதில் விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, தன்னையும் தன் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னதாகவும், பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு தன்னை மட்டும் அழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் கோபத்துடன் தன் அம்மாவை அழைத்துக் கொண்டு இந்தியா திரும்பிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சின்மயி நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர் கவிஞர் வைர்முத்துவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உண்மைதான் என்றும், இதை வைரமுத்துவால் மறுக்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன் என்றும் தெரிவித்தார்.
புகார் தொடர்பாக தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்ட சின்மயி, இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு ஆதாரம் கேட்பது நியாயமற்றது என குறிப்பிட்டார். இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கெனவே நடைபெற்றுள்ள நிலையில் அவர்கள் சார்பாக தான் முதலில் குரல் கொடுத்துள்ளதாக சின்மயி ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.
Discussion about this post