பெரிய மனிதர்கள் போர்வையில் ஒளிந்திருப்பவர்களின் பாலியல் குற்றச்சாட்டுக்களை எல்லாம் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் மீ டூ (ME TOO) இயக்கத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். உண்மையை உரக்கச் சொல்லும் நேரம் வந்து விட்டது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
பணியிடங்களில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்கள் தற்போது ‘மீ டு’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பகிரங்கப்படுத்தி வருகின்றனர். இதில் புகார்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் உள்ளன. இதில் அரசியல் மற்றும் சினிமாத் துறையினர் படும் பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. பெரிய மனிதர்கள் கண்ணியமானவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களின் முகத்திரைகள் கிழிந்து வருகின்றன.
மத்திய வெளியுறவுத்துறை இணை யமைச்சர் எம்.ஜே.அக்பரும் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கிறார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பாலியல் புகாரை துணிச்சலுடன் தெரிவிக்க வழிவகுத்திருக்கும் இந்த ‘மீ டூ’ இயக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
இது குறித்து நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறுகையில், ‘பெண்களை மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்துவதை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது. அப்படி இல்லாதவர்களுக்கு இங்கு இடமில்லை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். மாற்றத்தை கொண்டு வரும்பொருட்டு உண்மையை தெளிவாகவும், உரக்கவும் சொல்லும் நேரம் இது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
Discussion about this post