திருச்சியிலிருந்து பயணிகளுடன் துபாய் பறந்த போயிங் ரக விமானம் ஒன்று விபத்திலிருந்து தப்பிய பரபரப்பு சம்பவம் நேற்று நடைபெற்றது. 136 பயணிகளும் உயிர்தப்பிய பரபரப்பான தருணங்களைக் காண்போம்….
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சியில் இருந்து துபாய்க்கு தினமும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் போயிங் ரக விமானம் ஒன்று நேற்று அதிகாலை 1.15 மணிக்கு துபாய்க்கு புறப்பட தயாரானது.
துபாய் செல்வதற்காக அதில் 130 பயணிகள் அமர்ந்தனர். விமானிகள் உட்பட 6 ஊழியர்களும் இருந்தனர். விமானிகள் கணேஷ் பாபு, அனுராக் ஆகியோர் விமானத்தை இயக்கினார்கள்.
ஓடுபாதையின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி நோக்கி வேகமாக சென்ற விமானம் தரையில் இருந்து மேலே எழும்பும் போது, வழக்கத்திற்கு மாறாக தாழ்வாக பறந்த விமானத்தின் பின்பக்க சக்கரங்கள் ஓடுபாதையின் கடைசி பகுதியில் இருந்த ஐ.எல்.எஸ். எனப்படும் ஆண்டெனா கருவிகள் மீது மோதி, அதன் அருகில் உள்ள விமான நிலையத்தின் சுற்றுச்சுவரின் மேல் பகுதியை உடைத்துக்கொண்டு பறந்தது.
விமானத்தின் சக்கரங்கள் இடித்ததால், சுமார் 10 அடி உயரம் உள்ள அந்த சுற்றுச்சுவரின் மேல் பகுதியில் 2 இடங்களில் தலா 5 அடி அகலத்திற்கு சுவர் இடிந்து விழுந்தது. 5 ஆண்டானா கருவிகளும், ஒரு கண்காணிப்பு கருவியும் வளைந்து சேதம் அடைந்தன. ஆனாலும் விமானம் எந்த வித பிரச்சினையும் இன்றி வானில் பறந்தது.
இந்த விபத்தை கண்காணிப்பு கோபுரத்தில் நின்று கொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் பார்த்து உயர் அதிகாரிகளுக்கும், விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் உள்பட அதிகாரிகள் குழுவினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக கட்டுப்பாட்டு அறை மூலம் அந்த விமானிக்கு விபத்து நடந்திருப்பது பற்றி தகவல் கொடுக்க முயன்றனர். ஆனால் அதற்குள் விமானம் திருச்சி வான் எல்லையை தாண்டி சென்று விட்டது.
சுற்றுச்சுவரை இடித்து தள்ளி விட்டு பறந்து சென்ற விமானம் எந்த வித சேதமும் இன்றி துபாய் வரை பறக்க முடியுமா? அதில் உள்ள ஊழியர்கள் உள்பட 136 பயணிகளும் துபாய் வரை பாதுகாப்பாக போய்ச் சேர முடியுமா? என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. விமானம் சுற்றுச்சுவர் மீது மோதிய போது விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் என்ன நடந்தது? எதனால் இந்த சத்தம்? என்று தெரியாமல் பயணிகள் உயிர்ப் பயம் மேலோங்க ஆபத்தான பயணத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையே பிரச்சினைக்குரிய அந்த விமானம் மஸ்கட் நகர் எல்லைக்குள் சென்று விட்டது. அப்போது விமான நிலைய ஆணைய குழும அதிகாரிகள் விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரை இறக்குமாறு விமானிக்கு கட்டளை பிறப்பித்தனர்.
இந்த கட்டளையை ஏற்று விமானிகள் விமானத்தை மும்பைக்கு திருப்பி ஓட்டி வந்து அங்குள்ள விமான நிலையத்தில் அதிகாலை 5.30 மணிக்கு தரை இறக்கினார். விமானம் பாதுகாப்பாக தரை இறங்கிய பின்னரே அதில் இருந்த 136 பயணிகளும், ஊழியர்களும் தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை எண்ணி ஆனந்த கண்ணீர் விட்டனர்.
மும்பையில் விமானம் தரை இறங்கிவிட்டது என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பின்னர் அந்த பயணிகள் வேறொரு விமானம் மூலம் மும்பையில் இருந்து துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சியில் சுற்றுசுவர், ஆண்டனா மீது மோதியதில் விமானத்தின் அடிபாகம் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. சுற்றுசுவரில் இருந்த கம்பி வலை விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இருந்தது. விமானம் மும்பையில் தரை இறங்கி பிறகு அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்திய பிறகு தான் இந்த சேத விவரம் தெரியவந்தது.
இந்த சேதங்களை ஆய்வு செய்த மும்பை அதிகாரிகள் விமானம் பெரிய விபத்தில் இருந்து தப்பி உள்ளது என்று திருச்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பி உயர பறக்கும் நேரத்தில் விமானம் சுற்றுச்சுவரை சேதப்படுத்தி விபத்து ஏற்படுத்தியதற்கு விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது விமானியின் கவனக்குறைவினால் இந்த விபத்து நடந்ததா? என விசாரண நடத்தி வருகின்றனர்.
விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது டுவிட்டர் பதிவில், திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்துக்கு விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தியதாகவும், விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய துணைக்குழு ஒன்றை ஏர் இந்தியா அமைத்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
Discussion about this post